ஊத்தங்கரை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த பெண் உள்பட 3 பேர் மீட்பு-2 பேர் மீது வழக்குப்பதிவு

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த பெண் உள்பட 3 பேர் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-08-19 15:50 GMT

ஊத்தங்கரை:

தொழிலாளர்கள்

ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரன்குட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சக்தி (32), மல்லிகா (36). கூலித் தொழிலாளர்கள். இவர்கள் 3 பேரும் கல்லூரை சேர்ந்த ரத்தினகலா (48) என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

அந்த சமயத்தில் ரத்தினகலாவிடம், பாண்டிதுரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றார். அதேபோல சக்தி மற்றும் மல்லிகா ஆகியோர் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றனர். சக்தி, மல்லிகா வட்டியுடன் சேர்த்து ரூ.50 ஆயிரம் திரும்ப செலுத்தியதாக கூறப்படுகிறது.

மீட்பு

இதனிடையே பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகியோர் வேறு இடத்துக்கு வேலைக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அத்திரம் அடைந்த ரத்தினகலா, இவருடைய உறவினர் வேலு (45) ஆகியோர் 3 பேரையும் மீண்டும் தங்கள் செங்கல் சூளைக்கு அழைத்து வந்தனர். பின்னர் கடனாக பெற்ற பணத்தை கேட்டு, அவர்களை மிரட்டி, தாக்கினர்.

மேலும் கடன் தொகையை திரும்ப செலுத்தும் வரை செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்க்க கட்டாயப்படுத்தினர். இதனால் பாண்டிதுரை, சக்தி, மல்லிகா செங்கல் சூளையில் கடந்த 6 மாதமாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை கிராம நிர்வாக அலுவலர் பாபு, அங்கு சென்று பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகியோரை மீட்டார். மேலும் அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார்.

வழக்கு

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார். மேலும் ரத்தினகலா, வேலு ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் கொத்தடிமை தடை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாங்கிய கடனுக்காக பெண் உள்பட 3 தொழிலாளர்களை செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்க்க வைத்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்