செல்போனில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடி இலவச வீட்டுமனை பட்டா: தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை
செல்போனில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜின் நடவடிக்கையால் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.;
செல்போனில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் காலையில் ஆட்டோவில் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு சென்று, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தார்.
அப்போது அங்கிருந்த அலுவலர்கள், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மனு வழங்குமாறு தெரிவித்தனர். இதுகுறித்து மாரிமுத்து, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இலவச வீட்டுமனை பட்டா
இதையடுத்து கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில், மாரிமுத்து ஆட்டோவில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். தொடர்ந்து தாலுகா அலுவலக நுழைவுவாயிலில் ஆட்டோவில் இருந்த மாரிமுத்துவை தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் சந்தித்து பேசி கோரிக்கை மனுவை பெற்று கொண்டனர்.
தொடர்ந்து நாகலாபுரத்தில் தகுதியான காலிமனை இல்லை என்பதால், மாரிமுத்துவுக்கு விளாத்திகுளத்தில் காலிமனை வழங்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு சம்மதித்த மாரிமுத்துவுக்கு உடனே விளாத்திகுளத்தில் இலவச வீட்டுமனை பட்டாவுக்கான உத்தரவு கடிதத்தை தாசில்தார் ராமகிருஷ்ணன் வழங்கினார். செல்போனில் கோரிக்கை விடுத்த உடனே இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் செந்தில்ராஜிக்கு மாற்றுத்திறனாளி மாரிமுத்து நன்றி தெரிவித்தார்.