திருமாந்துறை-லெப்பைக்குடிக்காடு சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

விபத்துகளை தவிர்க்க திருமாந்துறை- லெப்பைக்குடிக்காடு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-03 17:50 GMT

குன்னம்:

அதிக அளவில் வாகன போக்குவரத்து

பெரம்பலூர் மாவட்ட எல்லை பகுதியான திருமாந்துறை கிராமம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியின் இடதுபுறத்தில் உள்ள அணுகுசாலை வழியாக லெப்பைக்குடிகாட்டிற்கு செல்ல வேண்டும். இந்த வழியை திருமாந்துறை, லெப்பைக்குடிகாடு, கழனிவாசல், ஆடுதுறை, கீழக்குடிக்காடு, ஒகளூர், புதுப்பேட்டை, இந்திரா நகர், அகரம்சீகூர், திட்டக்குடி எல்லைப்பகுதி ஆகிய கிராம மக்களும், அதனை தொடர்ந்து வடக்கலூர், பழைய அரசமங்கலம், கிழுமத்தூர், கத்தாழைமேடு ஆகிய கிராம மக்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த சாலையில் கிராம மக்கள் போக்குவரத்திற்கு இருசக்கர வாகனங்கள், பயணிகள் ஆட்டோ மற்றும் பஸ்கள் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இச்சாலையில் சரக்கு வேன், லாரி, தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள், கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டர்கள் ஆகியவையும் சென்று வருகின்றன. திருமாந்துறை சுங்கச்சாவடியில் இருந்து லெப்பைக்குடிகாட்டிற்கு செல்லும் சாலையின் நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

விபத்தில் சிக்குகின்றன

இந்த சாலை குறிப்பாக திருமாந்துறை ஊர் கடைசியில் இருந்து லெப்பைக்குடிக்காடு வரை வெள்ளாற்றங்கரையிலும், ஒகளூர் செல்லும் வரத்துவாய்க்காலின் நடுவிலும் அமைந்துள்ளது. 2 கரைகளுக்கும் நடுவே அமைந்த இச்சாலை மிகவும் குறுகிய அளவில் உள்ளது. இந்த சாலையில் எதிர் எதிரே இரண்டு பஸ்களோ அல்லது லாரிகளோ வந்தால், நின்று நிதானமாக இரண்டு பக்க கரைகளையும் பார்த்து சென்றால் மட்டுமே சாலையை கடக்க முடியும். அந்த சமயங்களில் அவற்றை கடந்து சைக்கிள் கூட செல்ல முடியாது.

ஒரு சில நேரங்களில் நெருக்கடி ஏற்படும்போது சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழும் நிலையும் உள்ளது. ஆபத்தான சூழ்நிலையில் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் செல்வது கூட கடினமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.

கோரிக்கை

மேலும் தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க இந்த சாலையில் ஒரே நேரத்தில் 2 பஸ்கள், பக்கவாட்டில் 2 இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு (சுமார் 25 அடி வரை) சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்