ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை
சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்காலில் உள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கழுமலை ஆறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தண்ணீர் மூலம் செம்மங்குடி, திருத்தோணிபுரம், திட்டை, தில்லைவிடங்கன், தென்பாதி, சீர்காழி, சட்டநாதபுரம், தாடாளன் கோவில், அகணி, நிம்மேலி, வள்ளுவக்குடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், தேனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலில் தற்போது தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஆகாய தாமரைகள்
ஆனால், இந்த வாய்க்காலில் மயிலாடுதுறை சாலை, கொள்ளிடம் முக்கூட்டு, தாடாளன் கோவில், ெரயில்வே ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆகாயத் தாமரைகள் மண்டியுள்ளது. தண்ணீர் முழுமையாக வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பாசன வாய்க்காலில் குறைவான தண்ணீரே தேங்கியுள்ளது. எனவே, கழுமலை ஆறு பாசன வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.