ஜெயங்கொண்டம் வழியாக ரெயில் பாதை அமைக்க கோரிக்கை
ஜெயங்கொண்டம் வழியாக ரெயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
ஜெயங்கொண்டம்:
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்து பேசினார். துணைத் தலைவர் ராமசாமி வரவேற்று பேசினார். செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி இயக்க வரவு, செலவு மற்றும் நீத்தார் நிதி உதவி திட்ட வரவு செலவை வாசித்தார்.
கூட்டத்தில், ஒருங்கிணைந்த உடையார்பாளையம் வட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் பொன்னேரியில் கொள்ளிடம் நீரை நிரப்பி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம், ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும். நெசவுத்தொழிலில் அதிக ஈடுபாடுகள் கொண்டுள்ளவர்கள் வாழும் செங்குந்தபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். தா.பழூரை தலைமையிடமாக கொண்டு தா.பழூர் வட்டம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிய க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்வது என்றும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கும்பகோணம் சாலையில் பாத்திமா பெண்கள் பள்ளி வரையிலும், நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையம் வரையிலும் மக்கள் சிரமமின்றி கடந்து செல்ல சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும். மத்திய அரசு வழங்கி உள்ளது போல் கடந்த ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.