ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

Update: 2023-03-25 21:26 GMT

நீதித்துறையின் மேம்பாடு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மதுரையில் கோர்ட்டு கூடுதல் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் தமிழில் வணக்கம் தெரிவித்து பேச தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

'வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு' என்பதற்கேற்ப அற்புதமான விருந்தோம்பல் அளித்ததற்கு நன்றி.

தமிழகம், நீதித்துறை கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை முனைப்புடன் மேம்படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வக்கீல்களும் பணியாற்றும் நிலை உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் சார்பாக 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

அதில் சுப்ரீம் கோர்ட்டின் கிளைகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது சுப்ரீம் கோர்ட்டு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தற்போது வக்கீல்களின் வசதிக்காக நேரடி மற்றும் இணைய விசாரணை நடைமுறையில் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் விசாரணையில், ஒரு வக்கீல் மேலூரிலோ அல்லது விருதுநகரிலோ இருந்து கொண்டு வாதாடலாம். கோர்ட்டின் செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதால், மதுரை, திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் சுப்ரீம் கோர்ட்டின் நடைமுறைகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை தரும்.

சட்டத்திருத்தம் அவசியம்

அடுத்ததாக ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக்கும் கோரிக்கையை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியமாகிறது. கடைசியாக, நீதிபதி நியமனங்களில் சமூகநீதியை காக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நான் உள்பட 6 பேர் கொண்ட குழு கொலீஜியத்தில் இருந்து முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

ஆங்கிலம் நம்முடைய முதன்மை மொழி அல்ல. நம் தாய்மொழியில்தான் நம்மை படிக்க வைத்தார்கள். சில வக்கீல்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஐகோர்ட்டுகளில் வக்கீல்கள் தாய்மொழியை பயன்படுத்த நீதிபதிகள் ஒத்துழைக்கலாம். குறிப்பாக இளம் வக்கீல்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருங்கள்.

உத்தரவுகள் மொழிபெயர்ப்பு

ஐகோர்ட்டு உத்தரவுகளும் அந்தந்த பிராந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். நாடு முழுவதும் 1 கோடியே 11 லட்சத்து 685 ஐகோர்ட்டு தீர்ப்புகள் உள்ளன. அதில் 8 லட்சத்து 76 ஆயிரம் உத்தரவுகள் சென்னை ஐகோர்ட்டில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இந்த உத்தரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படும் போது அவை குறித்து பொதுமக்களும் அறிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் இளம் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரைதான் வழங்குகிறார்கள். சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போதுமானது அல்ல. இதனால் இளம் வக்கீல்கள் தங்களுக்கு தொடர்பில்லாத வேறு துறைகளில் பணியாற்றும் நிலையும் ஏற்படுகிறது.

இளம் வக்கீல்கள் மீது நம்பிக்கை

இளம் வக்கீல்களின் தொடக்க காலம், கற்றுக்கொள்வதற்கான காலமாகும். அவர்களுக்கு குறைந்த தொகை அளிக்கும் நடைமுறையை மூத்த வக்கீல்கள் மாற்ற முயற்சியுங்கள். இன்றைய இளம் வக்கீல்கள் மிகவும் திறமையானவர்கள். கூர்மையாக இருக்கின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களிடம் மூத்த வக்கீல்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுங்கள். இளம் வக்கீல்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

சட்டத்துறையில் பெண்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று புள்ளி விவரம் கூறுகின்றன. அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்