பள்ளி தலைமைஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யகோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி தலைமைஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யகோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தலைமை ஆசிரியர் இடமாற்றம்
ஓட்டப்பிடாரம் அருகே பெரியநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 45 குழந்தைகள் பயின்று வருகிறனர். இந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக சாமுவேல்துரை பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் எஸ்.கைலாசபுரத்தில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இடமாற்ற உத்தரவை ரத்து ெசய்து மீண்டும் அவரை பள்ளியில் பணிஅமர்த்த கோரியும் நேற்று காலையில் பள்ளி முன்பு மாணவர்களும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்தும், மீண்டும் அவரை பணியில் அமர்த்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, வட்டார கல்வி அலுவலர் பவானிந்தி ஈஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர் கூறுகையில், நல்ல முறையில் பணியாற்றி வந்த தலைமையாசிரியரை மீண்டும் எங்கள் பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று கறாராக தெரிவித்தனர்.
மீண்டும் பணியில் அமர்த்த உறுதி
இதைதொடர்ந்து பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மீண்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.