திருத்தணியில் முக்கிய சாலைகளில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை பழுதுநீக்கும் பணி

திருத்தணியில் முக்கிய சாலைகளில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை பழுதுநீக்கும் பணி தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-06 12:13 GMT

திருத்தணி நகராட்சியில், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கடந்த 2016-ம் ஆண்டு நகர் முழுவதும் 72 கண்காணிப்பு கேமராக்கள் வியாபாரிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பல்வேறு சங்கங்களின் உதவியுடன் பொருத்தப்பட்டன. கேமராவில் பதிவாகும் காட்சிகளை திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்கள் மழை மற்றும் வெயில் காரணமாக பழுதடைந்துள்ளன. நாளை முதல் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் உத்தரவின் பேரில் திருத்தணி நகர் முழுவதும் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை பழுது பார்க்கும் பணி தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதைபோல நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்