செம்பாட்டூர் அருகே மின்மாற்றி பழுது: குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செம்பாட்டூர் அருகே மின்மாற்றி பழுதடைந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-10-08 19:23 GMT

மின்மாற்றி பழுது

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட கூறுப்பட்டியில் இயங்கி வந்த மின்மாற்றி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மின்வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் புதுக்கோட்டை-அண்டக்குளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பாட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கணேஷ், வெள்ளனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சமாதானம் அடைந்த அப்பகுதி மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்