சென்னை எழும்பூரில் சாலை ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
சென்னை எழும்பூரில் சாலை ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.;
சென்னையில் பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சிக்கு, பொதுமக்கள் சார்பில் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன. மேலும் கோர்ட்டு உத்தரவின்படி ஆஸ்பத்திரி, பள்ளிகள், ரெயில்நிலையம் அருகே 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் எழும்பூர் ரெயில் நிலையம் முன்பு, காந்தி இர்வின் சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று காலை 20 மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்றினர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், கோர்ட்டு உத்தரவின்படி, எழும்பூரில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 60 கடைகள் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.