சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2023-03-15 18:45 GMT

கோவை,மார்ச்.16-

கோவை-திருச்சி ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளைஅகற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி சாலை

கோவை மாநகர பகுதியில் திருச்சி ரோடு முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் இருபுறத்திலும் ஆக்கரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனேவ ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் தொடங்கியது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் இருந்து சுங்கம் சந்திப்பு வரும் பகுதி இடதுபுறத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நடைபாதையைதான் பலர் ஆக்கிரமித்து கடைகளை வைத்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது.

அதுபோன்று பாதையை ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த தள்ளுவண்டி கடைகளும் அகற்றப்பட்டன. இதுதவிர மேலும் பல கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடையின் போர்டைதான் வெளியே வைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். அவற்றை அதிகாரிகள் உடனடியாக அகற்றினார்கள். தொடர்ந்து இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அவர்களை எச்சரித்தனர். இது குறித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் இருந்து சுங்கம் ரவுண்டானா வரை சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். முதற்கட்டமாக இடதுபுறத்தில் 10 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இடதுபுறத்தில் பணிகளை முடித்துவிட்டு பின்னர் வலதுபுறத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

எனவே சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். இந்த பணிகள் முடிந்த பின்னர் சிங்காநல்லூரில் இருந்து ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்