பக்தர்களுக்கு இடையூறு; பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பழனி அடிவாரம், சன்னதிவீதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;
பழனி அடிவாரம், சன்னதிவீதிகளில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போதே பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலையோர பகுதியில் பக்தர்கள் வருவதை காண முடிகிறது. அதேபோல் தற்போது சபரிமலை சீசன் என்பதால் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய அய்யப்ப பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளையில் பழனி அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்தநிலையில் பழனி அடிவாரம், சன்னதிவீதி பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டு வந்தனர். இதனால் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதைத்தொடர்ந்து இன்று நகராட்சி அதிகாரிகள் பழனி அடிவாரம், சன்னதிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி திருஆவினன்குடி கோவில் பகுதியில் இருந்து பாதவிநாயகர் கோவில் வரையுள்ள கிரிவீதியின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பின்னர் அகற்றப்பட்ட பொருட்களை நகராட்சி பணியாளர்கள் லாரியில் ஏற்றி சென்றனர். அதிகாரிகள் ஒருபுறம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டபோது வியாபாரிகள் பலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு இடையூறாக வரும் நாட்களில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கணக்கன்பட்டி
இதேபோல் ஆயக்குடியை அடுத்த கணக்கன்பட்டி பகுதியில் திண்டுக்கல்-பழனி சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் சசிக்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.