விருத்தாசலம் வடக்கு ரத வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

விருத்தாசலம் வடக்கு ரத வீதியில் இருந்த ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

Update: 2022-09-07 17:11 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதி மற்றும் வடக்கு ரத வீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணியின்போது வடக்கு ரத வீதி சாலையின் ஒரு பக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடந்தது. கழிவுநீர் கால்வாய் அமைய உள்ள ஒரு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. நோட்டீசை பெற்றுக்கொண்ட கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிடத்தை அகற்ற இதுவரை முன்வரவில்லை. இதையடுத்து விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அறிவு களஞ்சியம், உதவி பொறியாளர் விவேகானந்தன், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்