மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு மீன் கடைகள் அகற்றம்: மீன்களை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்

மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மீன் கடைகள் மற்றும் உணவகங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்களை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-13 06:56 GMT

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலையை ஆக்கிரமித்து நடைபாதையில் சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன. பொதுசாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்டு உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் நேற்று காலை 8 மணியளவில் மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்தனர். அப்போது மீன் வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை ஐகோர்டின் உத்தரவு என்று எடுத்துக்கூறி தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அதிகாரிகள் அகற்றத்தொடங்கினர்.

கடைகள் அகற்றப்படும் தகவலை அறிந்து நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் திரண்டனர். அப்போது, மீன் கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள்.

இதனால், அதிருப்தி அடைந்த மீன் வியாபாரிகள் சிலர் தாங்கள் விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள், இறால், நண்டு ஆகியவற்றை சாலையில் கொட்டியும், சாலையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான லூப் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று முழுமையாக மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் பாரதி கூறியதாவது:-

இது எங்களுடைய பூர்வீக இடம். தொன்று தொட்டு இப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறோம். இங்குள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த மீன் வியாபாரம் தான் வாழ்வாதாரம். 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே சாந்தோம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி தீர்மானம் போட்டது. ஆனால், இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் லூப் சாலையை போக்குவரத்து சாலையாக அறிவித்துள்ளார்கள்.

பிரச்சினை வரும் என்பதாலேயே 2015-ல் இந்த சாலையை போடும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, எங்களை அப்புறப்படுத்த மாட்டோம் என்று சென்னை மாநகராட்சி கூறியது. ஆனால், இப்போது எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்துகிறார்கள். எனவே, அரசு நொச்சிக்குப்பம்-சீனிவாசபுரம் வரையிலான பகுதியை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மீனவர்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்