சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் அகற்றம்
சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.
அரியலூர் கீரைக்கார தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒரு மின்கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு இரும்பு மின் கம்பம் நட்டபோது, சாலையின் ஓரத்தில் நட வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த மின்கம்பத்தையும் சாலையின் நடுவிலேயே நட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக அத்தியாவசிய தேவைக்குக்கூட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் அந்த மின் கம்பங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் நகராட்சி, மின்வாரியத்துறை அலுவலகங்களில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் 10-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து, அந்த தெருவில் இடையூறாக இருந்த 2 மின்கம்பங்களில் ஒன்று அகற்றபட்டது.