மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - ஏலதாரருக்கு அனுமதி வழங்கி பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு

மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்கி பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

Update: 2022-09-08 09:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உள்ளூர் திட்ட குழுமம் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறது. இதில் ஏற்பட்ட குழப்பத்தால் வாகன நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் என இரு கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இரு கட்டணங்களையும் ஒன்றாக வசூலித்து அவற்றின் சதவீத அடிப்படையில் பேரூராட்சியும், உள்ளூர் திட்ட குழுமமும் சதவீத அடிப்படையில் பங்கிட்டு கொள்கின்றன.

நடப்பு ஆண்டுக்கான பொது ஏலம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு 17-ந்தேதி நடத்தப்பட்டது. இதில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை 7 மாதத்திற்கு சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அதிகபட்ச தொகையாக ரூ.94 லட்சத்துக்கு விடப்பட்டது.

ஆனால் வாகன கட்டணத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையால் தற்காலிகமாக கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ம் தேதி (நேற்று முன்தினம் வரை) வரை வாகன கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்ட காரணத்தால் ஏலதாரர் வாகன கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் ஏலதாரர் ரசூல்முகமது என்பவர் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் வாகன வரி வசூலிக்க விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்கி நேற்று முதல் சுற்றுலா வாகனங்களுக்கான வரி வசூலிக்க அனுமதி ஆணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

Tags:    

மேலும் செய்திகள்