விபத்தில் இறந்த மாணவனுக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் திரண்டனர்

அரசு பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலியானதற்கு இழப்பீடு கேட்டு பெற்றோருடன் உறவினர்கள் திரண்டனர்.

Update: 2023-06-19 19:30 GMT

அரசு பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலியானதற்கு இழப்பீடு கேட்டு பெற்றோருடன் உறவினர்கள் திரண்டனர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். சேலம் கன்னங்குறிச்சி அய்யர் தெருவை சேர்ந்தவர் நடராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கவுரி. மற்றும் அவர்களது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

மேலும் அவர்கள், அந்த கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி நின்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு வேலை

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எனது மகன் கவேஷ் (வயது 12) கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 14-ந்தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண், கற்களில் ஏறி கால் தவறி கீழே விழுந்தான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஏறி என் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். எனவே எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எரித்துக்கொலை

அதே போன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அடிமலைகாடு கண்ணாமூச்சி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சித்தாயி (வயது 85). இவர் நேற்று தனது மகனுடன் தள்ளாடியபடி வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தோம். அதே பகுதியை சேர்ந்த 2 பேரிடம் ரூ.7 ஆயிரம் கடன் பெற்றோம். அந்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் அந்த நிலத்தை எங்களிடம் இருந்து அபகரித்து விட்டனர்.

இதை தட்டிக்கேட்ட எனது இளைய மகனை அவர்கள் எரித்து கொலை செய்து விட்டனர். இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. நிலத்தை அபகரித்தவர்கள் எங்களை அங்கிருந்து துரத்தி விட்டனர். தற்போது வேறு இடத்தில் வசித்து வருகிறோம். எனவே அபகரித்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போன்று நேற்று ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்