கியாஸ் சிலிண்டர் விற்பனையாளரின் உறவினர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகை

Update: 2023-07-18 20:07 GMT

ஓமலூர்:-

தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கியாஸ் சிலிண்டர் விற்பனையாளரின் உறவினர்கள் நேற்று ஓமலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கியாஸ் சிலிண்டர் விற்பனையாளர்

சேலம் எஸ்.கொல்லப்பட்டி வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு பிரித்திகா ஸ்ரீ (6), நிரஞ்சனா என்ற நான்கு மாத பெண் குழந்தை உள்ளனர்.

முருகன் காகாபாளையம் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டோவில் சிலிண்டர் டெலிவரி செய்யும் விற்பனையாளராக வேலை பார்த்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அவர், தனது அண்ணி பூங்கொடியிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்த இடத்தில் சரிவர பணம் கொடுக்காததால் கடனாகி விட்டது. இதனால் ஓமலூரை அடுத்த செல்லப்பிள்ளை குட்டை பகுதியில் தனியார் நிறுவனம் அருகே பூச்சி மருந்து குடித்துவிட்டு ஆட்டோவில் படுத்திருப்பதாக கூறியுள்ளார்.

உடனே முருகனின் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் நேற்று முன்தினம் காலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

உடலை வாங்க மறுப்பு

இது குறித்து முருகனின் தந்தை ராமலிங்கம் ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராமலிங்கம், அவருடைய மருமகள் லோகேஸ்வரி மற்றும் உறவினர்கள் ஓமலூர் போலீசில் நாங்கள் கொடுத்த புகாரை மறைத்து வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகனின் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கியாஸ் ஏஜென்சியில் வணிக சிலிண்டர் விற்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால், முருகன் வணிக சிலிண்டரை வினியோகம் செய்து வந்தார். ஆனால் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட சிலிண்டர் பணம் உடனடியாக வருவதில்லை. கடனுக்கு சிலிண்டர் வினியோகம் செய் என உரிமையாளர் கூறுவார். பின்னர் பணத்தை அன்றே கட்ட சொல்லி வற்புறுத்தியதால் கந்து வட்டிக்கு வாங்கி அந்த பணத்தை முருகன் கட்டி வந்தார். இதனால் கடன் சுமை ஏற்பட்டு மனம் உடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடிதம்

மேலும் 'எனது சாவுக்கு ஏஜென்சியின் உரிமையாளர் தான் காரணம். அவர்கள் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கடிதத்தை போலீசாரிடம் நாங்கள் கொடுத்தும் அவர்கள் அதை மறைத்து விட்டனர். ஆனால் முருகன் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டதாக ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த தற்கொலை வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையில் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் வணிக சிலிண்டரை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

அதன்பேரில் முருகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் நேற்று இரவு வரை முருகனின் உடலை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாங்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் ஓமலூரில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்