அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்

வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.

Update: 2024-02-05 03:22 GMT

கோவை,

கோவை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன், வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு செய்ய வந்தார். அப்போது, நெடுங்குன்று மலைக்கிராம மக்கள் சாலை வசதி இல்லாததால் பிரசவித்த பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை உறவினர்கள் சுமந்து வருவதை அறிந்தார்.

உடனே அந்த கிராமத்துக்கு நேரில் சென்றார். தொடர்ந்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். மேலும் கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மருத்துவம் சார்ந்த குறைபாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் கிராம சுகாதார செவிலியர்கள் வருகை, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் வருகை, வால்பாறை அரசு ஆஸ்பத்திரி சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் குறித்து விசாரித்தார்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவமான நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை சாலை வசதி இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கு உறவினர்கள் சுமந்து சென்றது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு கிராம மக்கள், எங்களது கிராமத்திற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வில்லோணி எஸ்டேட் ஒத்தக்கடை வரை மட்டுமே சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி இல்லை. வனத்துறை சார்பிலோ, நகராட்சி நிர்வாகம் சார்பிலோ சாலை வசதி ஏற்படுத்தி தரலாம். ஆனால் எந்த துறை சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

பின்னர் அவர்கள் சுமந்து வந்த பெண்ணின் உடல் நலம் குறித்து இணை இயக்குனர் ராஜசேகரன் வீட்டுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், கலெக்டர் மூலம் சாலை வசதி செய்து கொடுக்கவும், வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்கவும், அங்குள்ள ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவும், மருத்துவ சேவை முழுமையாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்