சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை: மூதாட்டியின் உடலை கரும்பு தோட்டம் வழியாக கொண்டு சென்ற உறவினர்கள் மயிலம் அருகே பரபரப்பு
மயிலம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கரும்பு தோட்டம் வழியாக உறவினர்கள் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலம்,
பாதை வசதி இல்லை
மயிலம் அருகே அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக சுடுகாடு உள்ளது. ஆனால் சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான வயல் வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த தனிநபர் தனது வயல் வழியாக இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்றதாக கூறப்படுகிறது.
கரும்பு தோட்டம் வழியாக...
இந்நிலையில் அவனம்பட்டு கிராமத்தில் நேற்று முன் தினம் உயிரிழந்த 70 வயது மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் நேற்று வயல் வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீதிமன்ற தடை உள்ளதால் வயல் வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என கூறினர்.
இதையடுத்து உறவினர்கள் மூதாட்டியின் உடலை அங்குள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக தூக்கிச் சென்று பெரும் சிரமங்களுக்கு இடையே சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். மேலும் அக்கிராம மக்கள் சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.