விருத்தாசலம் அருகே வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-07-06 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் (வயது 50). சம்பவத்தன்று விருத்தாசலம் பஸ் நிலையம் எதிரே இவர் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளை விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர் எடுத்துச்சென்றது தெரிந்தது. இதில் ஆத்திரமடைந்த சேவியர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சதீஷ்குமார் விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார். அதில் குடிபோதையில் நான் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதாக கூறியும், என்னை சேவியர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில், சேவியர், இருசாளக்குப்பம் சிங்காரவேல் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சேவியர் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சதீஷ்குமாரின் உறவினர்கள் நேற்று இருசாளக்குப்பத்தில் சாலையின் நடுவே மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம்- ஆலடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ்குமார் தாக்கப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதனை ஏற்று சதீஷ்குமாரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்