உறவினர்கள் சாலைமறியல்
விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்ைக எடுக்கக்கோரி பாபநாசத்தில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்ைக எடுக்கக்கோரி பாபநாசத்தில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விவசாயி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மனகுண்டு மங்கலம் கிராமத்தில் நடுத்தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது53).விவசாயி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த ஒருவர் ரவி மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரவியிடம் ரூ.3 லட்சம் வாங்கி உள்ளார்.
ஆனால் ரவியின் மகனுக்கு வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்க மறுத்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மன உளைச்சலில் இருந்த ரவி பாபநாசம் அருகே மெலட்டூர் கள்ளர் நத்தத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) கடந்த 1-ந் தேதி குடித்தார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவியை சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று ரவியின் உறவினர்கள் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாபநாசம் கடை வீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் சாவுக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.