வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, வெளிநாடுகலில் இருந்து வருபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.;

Update:2022-12-27 23:30 IST

ஒத்திகை நிகழ்ச்சி

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, கை, கால், மூட்டு வலி வந்தவர்களுக்கு சளி மாதிரி, உடல் வெப்பம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து இணை இயக்குனர் மாரிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

350 படுக்கைகள்

மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 3 அரசு மருத்துவமனையில் தலா 100 படுக்கைகள், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் என மொத்தம் 350 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல, கொரோனா நோய் தடுப்புப்பணியில் 90 மருத்துவர்கள், 150 செவிலியர்கள், 100 மருத்துவப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான ஆக்கிஜன் வசதிகள், மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. காய்ச்சல், சளி, இருமல் ஆகிய தொந்தரவுடன் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது மழைகாலம் என்பதால் சாதாரண காய்ச்சல், இருமல், சளி மட்டுமே உள்ளதால் அதற்கான மருந்து, மாத்திரைகள், ஊசிகளை செலுத்தி வருகிறோம்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

வெளிநாடுகளில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் குறித்து பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். பொது இடங்களில் சமூக இடைவெளி, முககவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி போன்ற தொந்தரவு இருந்தால் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்