``குடும்பம் நடத்த வர மறுத்ததால்அரிவாளால் வெட்டினேன்''- கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை அருகே, இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், `குடும்பம் நடத்த வர மறுத்ததால் அரிவாளால் வெட்டினேன்' என கூறியுள்ளார்.

Update: 2023-04-28 18:48 GMT

பேட்டை:

நெல்லை அருகே, இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், `குடும்பம் நடத்த வர மறுத்ததால் அரிவாளால் வெட்டினேன்' என கூறியுள்ளார்.

வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி குன்னத்தூரை சேர்ந்த தர்மராஜ் மகள் சங்கரம்மாள் என்ற அபிராமி (வயது 28). அதே பகுதியை சேர்ந்த இவரது முறைமாமன் பிரபு ராஜா (32).

இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சக்திகா (9) என்ற மகளும், ஜெனித்ராஜ் (7) என்ற மகனும் உள்ளனர்.

பிரபு ராஜா குடித்துவிட்டு அபிராமியிடம் அடிக்கடி சண்டை போடுவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார். இதனால் அபிராமி கடந்த ஒரு மாதத்திற்கு முன் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சத்யாநகரில் உள்ள தனது பாட்டி லட்சுமி வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார். அங்கு வாடகை வீட்டில் தங்கி நெல்லை டவுனில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து பிரபுராஜா சுத்தமல்லியில் உள்ள சத்யா நகருக்கு வந்து நேற்று முன்தினம் அபிராமியை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

கைது - வாக்குமூலம்

இதுபற்றி சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய பிரபு ராஜாவை பேட்டை கூட்டுறவு மில் அருகே வைத்து கைது செய்தனர்.

பின்னர் பிரபுராஜா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது அத்தை மகளான அபிராமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தேன். அடிக்கடி எங்களுக்குள் குடும்ப தகராறு ஏற்படுவது உண்டு. மேலும் எனக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

வாழ்க்கையில் வெறுப்பு

இதனால் என்னிடம் சண்டை போட்டு விட்டு அவரது பாட்டி வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து சென்று விட்டார். குழந்தையும், மனைவியும் இல்லாததால் எனக்கு வாழ்க்கை வெறுப்படைந்தது. இதனால் நெல்லை சுத்தமல்லியில் அபிராமி வீட்டிற்கு வந்தேன்.

அவளிடம், மதுரைக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு என்னிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அதற்கு அவள் மறுக்கவே ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் சுத்தமல்லியில் இருந்து மதுரை தப்பி செல்வதற்காக பேட்டை மில் கேட் அருகே வந்த போது என்னை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்