அகதிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி போராட்டம்; 63 பேர் கைது

திருச்சியில் சிறப்பு முகாமை மூடக்கோரி போராட்டம் நடத்திய 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-29 19:29 GMT

கே.கே.நகர், ஜூன்.30-

திருச்சியில் சிறப்பு முகாமை மூடக்கோரி போராட்டம் நடத்திய 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், ருவாண்டா உள்பட பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலிபாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், போதை பொருட்கள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். இந்த முகாமில் தற்போது வரை 143 பேர் உள்ளனர்.

தொடர் உண்ணாவிரதம்

சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோர் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு முகாமில் இருந்த இலங்கை தமிழரான உமாரமணன் தனது உடலில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தநிலையில் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமை மூட வலியுறுத்தி மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழக ஜனநாயக கட்சித் தலைவர் கே.கே.ஷெரீப், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் நேற்று காலை திருச்சி மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட திரண்டு வந்தனர்.

63 பேர் கைது

இது பற்றி முன்கூட்டியே அறிந்து திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஜெயில்கார்னர் அருகே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சிறப்பு முகாமை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போராட்டம் நடத்திய 63 பேரை கைது செய்த போலீசார் அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க. ஆட்சியை தொடர்ந்து தி.மு.க. ஆட்சியிலும் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவது தொடர்கிறது. நீதிமன்றத்தில் பிணை கொடுத்தும் கூட அவர்களை விடுவிக்காமல் வைத்துள்ளனர். ஒருபுறம் தி.மு.க. அரசு இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்புகிறது. மறுபுறம், சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்களை வதைக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரட்டை நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

சிறப்பு முகாமை உடனடியாக மூட வேண்டும். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடரும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்