வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீவிபத்து
விளாத்திகுளம் அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். நேற்று மாலையில் ராமர், அவரது மனைவி ஆகியோர் விவசாய பணிக்கும், அவர்களது மகன், மகள் ஆகியோர் கல்லூரிக்கு சென்றுவிட்டனர். பூட்டியிருந்த அவர்களது வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. மேலும், புகைமூட்டமும் வெளியே வந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விளாத்திகுளம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.விளாத்திகுளம் தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதில், குளிர்சாதனப் பெட்டி வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.