வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு
குலசேகரம் பகுதி ஓட்டல்களில் வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு
குலசேகரம்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் குமரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களிலும் சோதனை நடந்து வருகிறது. அப்போது கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக குலசேகரம் மற்றும் ஆற்றூர் பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில் குமாரின் உத்தரவின் பேரில் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று குலசேகரம், திருவட்டார், ஆற்றூர் ஆகிய பகுதிகளிலுள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குலசேகரம் நாகக்கோடு, அரசு மூடு ஆகிய இடங்களில் உள்ள 2 ஓட்டல்களில் வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 4½ கிலோ இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். மேலும் ஆற்றூர் சந்திப்பில் ஒரு பேக்கரியில் குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்த 1½ கிலோ பொரித்த இறைச்சியையும் கைப்பற்றி அழித்தனர்.
மேலும் ஓட்டல்களிலும், பேக்கரிகளிலும், மைனஸ் 18 டிகிரி சென்டிகிரேடுக்கு குறைவாக இறைச்சி வகைகளை குளிர்சாதன பெட்டியின் பிரீசரில் வைக்கக்கூடாது என்றும், பொரித்த இறைச்சி வகைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது எனவும், பேக்கரி தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் தான் சேர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.