முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு: லோயர்கேம்பில் மின் உற்பத்தி குறைவு
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் லோயர்கேம்பில் மின் உற்பத்தி குறைந்தது;
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீ்ர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக அணையில் இருந்து வினாடிக்கு 1,822 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மின் உற்பத்தி குறைந்தது. 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி இன்று காலை முதல் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 1-வது ஜெனரேட்டரில் வினாடிக்கு 40 மெகாவாட், 2-வது ஜெனரேட்டரில் வினாடிக்கு 23, 3-வது ஜெனரேட்டரில் 23, 4-வது ஜெனரேட்டரில் 40 வீதம் என மொத்தம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கிடையே அணையின் நேற்றைய நீர்மட்டம் 130.15 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 213 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.