கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.;

Update:2023-01-19 13:53 IST
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கான முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த நவம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்த கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை குறைத்துள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 225 கனஅடி வீதம் வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 34.60 அடியாக பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்