ரூ.1.2 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
ரூ.1.2 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன.
உப்பிலியபுரத்தை அடுத்த வெங்கடாசலபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்த நாராயண பெருமாள் வகையறா கோவில்களுக்கு சொந்தமாக சுமார் 52 ஏக்கர் மானிய விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் சோபனபுரம் ஓசரப்பள்ளியில் உள்ள சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 7.58 ஏக்கர் மானிய நிலங்கள் சோபனபுரத்தை சேர்ந்த பாப்பு ரெட்டியார் என்பவரது கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாகவும், அவரது இறப்பிற்கு பிறகு கிருத்திகா, கண்ணன், கருணாகரன் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக குத்தகை கொடுக்காமல் ஆக்கிரமித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்து சமய அறநிலையத் துறையினர் மற்ற நிலங்களை வருடாந்திர குத்தகைக்கு ஏலம் விடுவதாக அறிவித்ததன்பேரில், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தவும், குத்தகை பாக்கியை வசூல் செய்யவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை வலியுறுத்தி 4 முறை ஏலத்தை புறக்கணித்தனர். இது பற்றி கோவில் செயல் அலுவலர் வேணுகோபாலன், திருச்சி இந்து சமய அறநிலையத்துறையினருக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி, பெரம்பலூர் உதவி ஆணையர் முன்னிலையில் இலாகா ஆய்வாளர், கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், சிறப்பு அலுவலர்கள் மற்றும் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.