மணலிபுதுநகர் அருகே ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மணலிபுதுநகர் அருகே ரூ.10 கோடி நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.;

Update:2023-09-24 11:00 IST

மீஞ்சூர் அடுத்த மணலிபுதுநகர் அருகே வெள்ளிவாயல் கிராமத்தில் செல்லும் நீர்நிலை ஓடை நிலத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ததை பொன்னேரி வருவாய்த்துறையினர் மீட்டனர். மீஞ்சூர் அடுத்த மணலிபுதுநகர் அருகே வெள்ளிவாயல் கிராமம் உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அருகே கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் நீர் நிலைப்படிப்பு பகுதியை இரு தனியார் கம்பெனிகள் ஆக்கிரமிப்பு செய்து கால்வாய்யை மூடி சமப்படுத்தினர். இதனால் அந்த வழியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே மழைக்காலங்களில் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு வெள்ளிவாயல் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொன்னேரி தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து பொன்னேரி வருவாய்த் துறையினர் கடந்த 2 நாட்களாக வெள்ளிவாயல் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனி ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அளவு எடுத்து வருகின்றனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு பகுதிகளை பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் சோழவரம் ஒன்றிய செயலாளர் ராஜாத்திசெல்வசேகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். தற்போது வரை 3 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து அதிகாரிகள் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு ஏதும் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்