மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-05-10 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் செல்போன் தொலைந்து போனதாக கொடுக்கப்படும் புகார்கள் முறையாக மனுக்களாக பதிவு செய்யப்பட்டு மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 253 செல்போன்கள் தொலைந்து போனதாக புகார் பெறப்பட்டுள்ளது. இதில் தற்போது 54 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதுவரை 134 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 119 செல்போன்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 54 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள சைபர்கிரைம் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் செல்போன்கள் நவீன தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள செல்போன்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கணக்கு வைத்துள்ள எந்த வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் யாரும் தொலைபேசியில் அழைத்து உங்கள் வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. விபரங்களை கேட்க மாட்டார்கள். இணையத்தில் தேடி எந்த எண்ணையும் தொடர்பு கொள்ளக்கூடாது. முடிந்தவரை உங்களின் வங்கிக்கு நேரில் சென்று எந்த கோரிக்கையையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். பரிசுப்பொருள், லோன் தருவதாகவும், ஆன்லைன் வேலை என்று கூறுபவர்களையும் நம்ப வேண்டாம். மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும், www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியிலும் பதிவு செய்தால் முடிந்தளவு பணத்தினை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்