தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர் தென்காசி மாவட்டத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இங்கு தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தென்காசி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 18 பேர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 108 வாக்குகள் பதிவாகின.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் ஆகியோர் மாறி மாறி முன்னிலை பெற்ற வண்ணம் இருந்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணி முடித்தபோது செல்வமோகன்தாஸ் பாண்டியனே முன்னிலையில் இருந்தார். பின்னர் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கையில் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 89 ஆயிரத்து 315 வாக்குகள் பெற்று இருந்தார். செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 88 ஆயிரத்து 945 வாக்குகள் கிடைத்தன.
வாக்குகள் விவரம் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. பழனிநாடார் (காங்கிரஸ்) - 89,315
2. செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அ.தி.மு.க.) - 88,945
3. வின்சென்ட் ராஜ் (நாம் தமிழர் கட்சி) - 15,336
4. முகம்மது (அ.ம.மு.க.) - 9,944
5. திருமலைமுத்து (மக்கள் நீதி மய்யம்) - 2,188
6. மாடசாமி (சுயே.) - 1,978
7. சந்திரசேகர் (புதிய தமிழகம்) - 878
8. உதயகுமார் (அண்ணா திராவிடர் கழகம்) - 690
9. ரமேஷ் (சுயே.) - 684
10. பழனிமுருகன் (சுயே.) - 628
11. ரீகன்குமார் (சுயே.) - 495
12. ஆரோக்கிய பிரபு (சுயே.) - 428
13. ஜெகநாதன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி) - 416
14. செல்வகுமார் (நாம் இந்தியர் கட்சி) - 319
15. கருப்பசாமி (சுயே.) - 216
16. முகுந்தன் (எனது இந்தியா கட்சி) - 195
17. பழனிகுமார் (சுயே.) - 175
18. சுரேஷ்குமார் (அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) - 119
19. நோட்டா - 1,159
இந்த தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டுள்ளார். 10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க தென்காசி ஆட்சியருக்கு ஐகோர்ட்டு ஆணையிட்டுள்ளது.
மேலும் வழக்கு தொடந்த மணுதாரருக்கு வழக்கு செலவாக ரூ.10,000 வழங்க தேர்தல் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.