அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது மாடியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து குதித்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-25 08:39 GMT

சென்னை விருகம்பாக்கம், நடேசன்நகர் பகுதியில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களது வீடுகளை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சய் அரோரா தற்போது டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான ஏ-பிளாக் கட்டிடத்தின் 14-வது மாடியில் உள்ள வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடியை சேர்ந்த மதுசூதனரெட்டி (வயது 69) என்பவர் தனது மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.

டாக்டரான மதுசூதன ரெட்டி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 14-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த மதுசூதனன், திடீரென கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மதுசூதன ரெட்டியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அவரது வீட்டில் தற்கொலை செய்வதற்கு முன்னதாக மதுசூதனரெட்டி கைப்பட எழுதியதாக கூறப்படும் 8 பக்க உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், தனது மகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதால் மனமுடைந்ததன் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்