பூந்தமல்லி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது

பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலத்தை மோசடி செய்த ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-03 08:50 GMT

சென்னையை அடுத்த பெரும்பாக்கம், ராம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). என்ஜினீயரான இவர், தன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கி, அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

பூந்தமல்லி அருகே நோம்பல் நகரில் இவருக்கு சொந்தமான 2400 சதுர அடி நிலம் உள்ளது. அதனை விற்க விரும்பிய அய்யப்பன், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அந்த இடத்தை சென்று பார்த்தபோது அந்த நிலத்தில் வேறொருவர் வீடு கட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விசாரணையில், அவருடைய மைத்துனரும்(மனைவியின் அண்ணன்), ரியல் எஸ்டேட் தரகருமான பிரபு (53), ஆள் மாறாட்டம் செய்து அந்த இடத்தை வேறொருவருக்கு விற்றது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், தனது உறவினரான பிரபுவிடம் தனக்கு தெரியாமல் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றதுடன், நிலத்தை விற்ற பணத்தையும் தராதது ஏன்? என கேட்டார். ஆனால் அதற்கு பிரபு சரியான பதில் அளிக்கவில்லை.

இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் அய்யப்பன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தார். மோசடி செய்யப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1.50 கோடி என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்