கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயார் - ஆந்திரா பொதுப்பணித்துறை

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளதாக ஆந்திரா பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2022-11-04 12:52 GMT

பிரதான ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை வருடந்தோறும் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கண்டலேறு அணையில் இருந்து

கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வாட்டி எடுத்த வெயிலால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து மே மாதம் 5-ந்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வரத்தால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதை அடுத்து ஜூலை 19-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

மதகு சேதம்

பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுக்கூடம் உள்ளது. இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு கிணறு சேதமடைந்திருந்தது. இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஜூலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெறவில்லை.

தயார்

இந்த நிலையில் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோகுல்தாஸ், உதவி பொறியாளர்கள் சந்திரமோகன், பெஞ்சலய்யா ஆகியோர் நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:-

ஆந்திராவில் பெய்த பலத்த மழைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கண்டலேறு அணை நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. தற்போது 53.27 டி.எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தமிழக அரசு கேட்டு கொண்டால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பூண்டி ஏரியில் மதகு கிணறுகள் அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா நதி கால்வாய் சீரான சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், பணிகள் முடிவடைந்த பிறகு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார். அப் போது உதவி பொறியாளர்கள் பழனிசாமி, சதிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்