3-வதுநாளாக ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

3-வதுநாளாக ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-09 14:37 GMT

வெளிப்பாளையம்:

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வதுநாளாக நாகை மாவட்டத்தில் 368 கடைகளை அடைத்து ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

3-வதுநாளாக ஆர்ப்பாட்டம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3-வதுநாளாக நாகை தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் பொறுப்பாளர்கள் சிங்காரவேலு, சீத்தாலட்சுமி, சிவசண்முகம், அழகிரி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன்கடைகளுக்கும் 4 ஜி சிம் கார்டு வழங்க வேண்டும்.

368 கடைகள் அடைப்பு

மோடம் வழங்கி தடையில்லா இணையதள சேவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 368 ரேஷன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சிவகுமார், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் இளமதி, வட்ட பொறுப்பாளர் நீலாயதாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆடியபாதம் நன்றி கூறினார்.

கீழ்வேளூர்

இதேபோல் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் வட்ட தலைவர் கேசவன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பணியாளர்கள் சங்க தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். இதில் வட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் முருகையன், மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நேற்று 2-வதுநாளாக வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்குவளை

திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்