தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்; மாநில தலைவர் பேட்டி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக பணியாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-05-29 17:17 GMT

தென்காசி:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக பணியாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் இளங்கோ வரவேற்றார். மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக நியாய விலை கடை பணியாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவரும், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவருமான பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

தொடர் வேலை நிறுத்தம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். கடந்த 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலங்களாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

காத்திருப்பு போராட்டம்

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 10-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காத்திருப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்