கோத்தகிரி அருகே முன்அறிவிப்பு இன்றி ரேஷன் கடை மூடல்; பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்
கோத்தகிரி அருகே முன்அறிவிப்பு இன்றி ரேஷன் கடையை மூடியதால் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.;
கோத்தகிரி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கொட்டக்கம்பை கிராமம் உள்ளது. இந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,000 பேர் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் அரசின் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம்( சனிக்கிழமை) தமிழ்நாடு நுகர்பொருள் கிடங்கில் இருந்து பொருட்களை எடுப்பதற்கு விற்பனையாளர் சென்றுள்ளார் என அறிவிப்பு பலகையில் எழுதி ஒட்டப்பட்டு ரேஷன் கடையை மூடி விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து நேற்றும் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி ரேஷன் கடை மூடப்பட்டு இருந்துள்ளது. இதையறியாத கூலி வேலைக்கு செல்வோர் விடுப்பு எடுத்தும், பொதுமக்களும் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இன்றி ேரஷன் கடை மூடப்பட்டு இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், விடுமுறை நாட்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் கடந்த 2 நாட்களாக ரேஷன் கடை மூடப்பட்டு உள்ளளது. குறிப்பாக நேற்று எந்த அறிவிப்பும் இன்றி ரேஷன் கடை மூடப்பட்டது ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் மற்றொரு நாள் விடுமுறை எடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் முறையான அறிவிப்பு இல்லாமல் ரேஷன் கடையை மூட அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.