பழனி அணைகளில் வேகமாக குறையும் நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் பழனி அணைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Update: 2023-07-29 19:30 GMT

தென்மேற்கு பருவமழை

பழனியில் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளுக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. அணைகளில் இருந்து கால்வாய் மூலம் குளங்களுக்கு தண்ணீர் சென்று, ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. அதன்படி கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

இதனால் பழனி இடும்பன்குளம், வையாபுரிக்குள பாசன விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். தற்போது நெற்பயிர் நன்கு வளர்ந்து உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக அணைகளின் நீர்ப்பிடிப்பில் போதிய மழை இல்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. அதேபோல் வெயில், காற்றின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

விவசாயிகள் தவிப்பு

இதனால் விவசாயிகள் குளங்களில் உள்ள நீரை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெரும்பாலான குளங்களிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. குறிப்பாக குளத்து மதகின் மட்டத்துக்கு கீழே தண்ணீர் சென்றுவிட்டது. இதனால் விவசாயிகள் மோட்டார் மூலம் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வயலுக்கு நீர் பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "நெற்பயிர் நன்கு வளர்ந்து கதிர் உருவாகும் பருவத்தில் உள்ளது. இந்த நேரத்தில் மழை பெய்யாததால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே மழை பெய்தால் மட்டுமே பயிரை காப்பாற்ற முடியும்" என்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, "இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய போது பரவலாக மழை இருந்தது. அதன்பிறகு போதிய அளவில் மழை பெய்யவில்லை. மேலும் அணைகளிலும் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் அணைகளின் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தும் சூழல் உள்ளது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்