திருவள்ளூர் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

Update: 2023-04-23 08:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 30 நாட்களாக ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ரம்ஜான் பிறை தெரிந்ததை ஒட்டி நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பெருநாளை கொண்டாடினார்கள். காலை 8 மணி அளவில் ஏராளமான முஸ்லிம்கள் பள்ளிப்பட்டு பேரி தெருவில் உள்ள ஜும்மா மசூதியில் வந்து சேர்ந்தனர். பிறகு அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக சித்தூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு சென்றனர். அங்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பள்ளிப்பட்டு, வெளியகரம், கத்திரிப்பள்ளி உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ரம்ஜான் சிறப்பு தொழுகை பள்ளிப்பட்டு தாலுகாவில் அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூர் பேட்டை, பொம்மராஜுபேட்டை, கொளத்தூர், ஆர்.கே. பேட்டை, வங்கனூர், அம்மையார் குப்பம், மூங்கிலேரி, கொண்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது.

திருத்தணி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்ய காலை முதல் முஸ்லிம்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காலையில் சுமார் 9 மணியளவில் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதேபோல் திருத்தணி நகரம், வீரகநல்லூர், திருவாலங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தர்காக்களில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் முஸ்லிம்கள் தங்களின் உறவினர்கள், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணியை கொடுத்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து பண்டிகையை கொண்டாடினர். இதைபோல திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 7 மணிக்கு முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக வந்து தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்புத் தொழுகையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்