ராமநாதபுரம்: குடி தண்ணீருக்காக 5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் பொதுமக்கள்...!
ஆர்.எஸ் மங்கலம் அருகே காவிரி குழாயில் தண்ணீர் வராததால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அலைந்து கஷ்டப்பட்டு தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்டப்படும் நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றது. திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்னும் மக்களின் குடிதண்ணீர் பிரச்சினை முழுமையாக தீரவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிதண்ணீருக்காக வடவயல் மற்றும் களக்குடி என 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களிலும் சென்று அலைந்து கஷ்டப்பட்டு குடிதண்ணீர் எடுத்து வரும் நிலை இருந்து வருகின்றது.
இது பற்றி சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும் போது,
சோழந்தூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வருவது கிடையாது. அதனால் சோழந்தூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள களக்குடி கிராமத்திற்கு சென்று அங்குள்ள குழாயில் வரும் குடிதண்ணீரை பிடித்து வருகிறோம். குடிதண்ணீருகாக தினமும் அலைந்து கஷ்டப்பட்டு வரும் நிலை என்று தான் எங்களுக்கு தீருமோ என்ற கவலை தான் தினமும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.