ரம்ஜான் பண்டிகை:பள்ளி வாசல்கள், திடல்களில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள், திடல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.;

Update:2023-04-23 05:15 IST


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள், திடல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதன் அடிப்படையில் ரமலான் மாதத்தில், அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பது வழக்கம். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்குவார்கள்.

30 நாள் நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுவார்கள். அதன்படி நேற்று ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிறப்பு தொழுகை

மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திடல் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதுபோல் தமுக்கம், திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள திடல்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இது தவிர, தமுக்கம் மைதானம், மகப்பூப்பாளையம், அரசரடி, வில்லாபுரம், நெல்பேட்டை, காஜிமார்தெரு, திருப்பரங்குன்றம், கலைநகர், வள்ளுவர்காலனி, சிலைமான், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, பள்ளபட்டி, கம்பூர், வெள்ளாலபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் திரளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர். மேலும், பெருநாள் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்தும், ஆரத்தழுவியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொழுகையின் முடிவில் உலக அமைதிபெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டும் சிறப்பு துஆ செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்