ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள்: கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழைப்பு

தமிழ்நாட்டு மக்களோடு ராஜீவ் காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-18 07:30 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை 21-ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட ராஜீவ் காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40-வது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும்தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.

ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதன்மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க உடன்பாடு கண்டவர்.

இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜீவ் காந்தி. இந்தியாவின் சிறந்த வல்லமைமிக்க பிரதமராக அவர் சுடர்விட்டார். இந்தியாவை பற்றி ராஜீவ் காந்திக்கு நிறைய கனவுகள் இருந்தது. இந்தியாவும், இந்தியர்களும் உலகில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று ராஜீவ் காந்தி கனவு கண்டார்.

அதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தாண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் உலகம் போற்றும் வகையிலே சாதனைகளை படைத்து இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார். தமிழ்நாட்டு மக்களோடு ராஜீவ் காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை. 1988 ஆம் ஆண்டில் 13 முறை தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமம் கிராமமாக அவரே வாகனத்தை ஓட்டிச் சென்று வழிநெடுக மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து ஏழை, எளிய மக்கள் மீது அன்பை பொழிந்தவர்.

தமிழ் மக்களின் பாச வெள்ளத்தில் திளைத்தவர். எதிர்கால இந்தியாவுக்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு மக்களின் ஆதரவோடு வழிநடத்தக் கூடிய ஆற்றல்படைத்த தலைவராக திகழ்ந்த ராஜீவ் காந்தி, 1991 தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளின் சதித் திட்டத்தினால் நயவஞ்சகமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். அவரது நினைவை தமிழக மக்களிடமிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளான 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலைகளிலும் நடத்தி மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்