கோவை கார் வெடிவிபத்து அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது - அண்ணாமலை
தமிழகத்தை மீண்டும் கவலர பூமியாக மாற்றத்துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து மக்களை காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கார் வெடிவிபத்து சம்பவம் அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.
பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது
தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.