தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணி ஆய்வு: குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்காவிடில் கருப்பு பட்டியலில் சேர்ப்பு
தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணி ஆய்வு செய்த மேயர் வசந்தகுமாரி குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்காவிடில் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கன மழையினால் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் புகுந்து கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் அப்போதைய தாம்பரம் நகராட்சி சார்பில் பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட மழையிலும் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு மழைநீர்வடிகால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.30 கோடியே 75 லட்சம் செலவில் பணிகள் கடந்த 15-ந் தேதி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணிகளின் நிலை குறித்து தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பேசிய மேயர் வசந்தகுமாரி, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த பதிவு ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.