தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்
மயிலாடுதுறையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி பேசியதாவது:-மழை பாதிப்புகளை தடுக்க போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல்படையினர், பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆற்றில் உள்ள நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் அறிக்கை அளிக்க வேண்டும். தேவையான மணல் மூட்டைகள் மற்றும் மணல் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். தாழ்வாக செல்லும், தொங்கும் மின்சார கம்பிகளை கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மின்சார வசதி உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். நகராட்சி துறை மூலம் குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலந்து வழங்கிட வேண்டும். பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும் சமயங்களில் தேவையான சுகாதார பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.