கடலூா் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கீழ்செருவாயில் 9.4 செ.மீ. பதிவானது
கடலூா் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது .இதில் அதிகபட்சமாக கீழ்செருவாயில் 9.4 செ.மீ. பதிவானது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. அதன் பிறகு இரவு முழுவதும் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. மேலும் இடையிடையே பலத்த மழையும் பெய்தது. இதையடுத்து பகலில் மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணி முதல் மழை மீண்டும் தூறத் தொடங்கியது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் மாநகரில் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், தொழுதூர், பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்செருவாயில் 9.4 செ.மீட்டரும், குறைந்தபட்சமாக வேப்பூரில் 0.3 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.