புதுக்கோட்டையில் மீண்டும் மழை

புதுக்கோட்டையில் மீண்டும் மழை பெய்தது.

Update: 2022-11-13 18:16 GMT

மீண்டும் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலான மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் மழை தொடர்ந்து பரவலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புதுக்கோட்டையில் இன்றும் பகலில் மழை எதுவும் பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக சூரிய வெளிச்சம் தென்பட்டது. மழை பெய்யக்கூடும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதேபோல மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பரவலாக ஒரே சீராக பெய்தது. தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.

மணல் மூட்டைகள்

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஏரி, குளங்களில் இருந்து உபரிநீர் பாதுகாப்பான முறையில் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையிலும் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டையில் பலத்த மழையின் போது வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் மழைநீர் அதிகமாகி அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்து சாலையில் வெளியேறி ஓடும்.

மேலும் இந்த மழைநீரானது பெரியார்நகர் பகுதி சாலையில் ஆறுபோல ஓடும். இதனை தடுப்பதற்காக வருவாய் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தின் கதவின் அருகே மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்வாய் ஓரத்திலும் மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பூக்கள் அழுகி வீணாகி வருகிறது

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், கரட்டான், சம்பங்கி, சென்டி, அரளி, பிச்சி, ரோஜா, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். ஏற்கனவே பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலைப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பூக்களின் உற்பத்தியும் கணிசமாக அளவில் குறைந்துள்ளதாக விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில்‌ சென்டி பூ பயிரிட்டுள்ள விவசாயிகளது பூந்தோட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் பூக்கள் மற்றும் செடிகள் அழுகி வீணாகி வருகிறது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்