ராமேசுவரம்,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே இரவு முழுவதும் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனிடையே ராமேசுவரம் பகுதியில் 3-வது நாளாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் மழை நீரில் தத்தளித்தபடியே சென்றன. இதேபோல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டப கட்டிடத்தின் முன்பும் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து குளுமையாக உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பனில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ெரயில் பாலத்தின் பணிகளுக்கு உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் படகு ஒன்று சேதமடைந்தது. நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்:- ராமேசுவரம்-40.70, பாம்பன்.60.40, தங்கச்சி மடம்-26.20.